விழுப்புரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில், ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு கார்கள், ஒரு போலி துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையை சேர்ந்த சிவன், தனது தொழில் ரீதியான நண்பர்களான சென்னையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா, சம்பத், தெலங்கானாவைச் சேர்ந்த ராஜேந்திரா ஆகியோருடன் கடந்த 18 ஆம் தேதி சம்பத் என்பவருக்கு சொந்தமான காரில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தனர்.
அங்கு புதுச்சேரியைச் சேர்ந்த குப்புசாமியிடம் தொழில் ரீதியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, சிவனை மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நாகராஜ், கைபேசியில் தொடர்புகொண்டு, தான் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் இருப்பதாகவும், அங்கு வருமாறும் அழைத்துள்ளார். அதன்பேரில், சிவன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு சென்று, பின்னர் அங்கிருந்து நாகராஜ் மற்றும் அவருடன் வந்த நபர்களுடன் கண்டாச்சிபுரம் நோக்கி சென்றுள்ளனர்.
கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் காட்டுப்பகுதி அருகில் சென்றனர். அப்போது, இவர்கள் வந்த காரை, இரண்டு கார்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளன. அந்த இரண்டு காரிலிருந்து ஐந்து நபர்கள் இறங்கினர். அதில் ஒருவர், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இவர்களிடமிருந்து கைபேசிகளை வாங்கிக்கொண்டு, நாகராஜ் காரில் இருந்த சிவன் மற்றும் ராஜேந்திரா இருவரையும் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து சிவனின் நண்பர் ராஜேஷ்கண்ணா கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக, கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கவும், கடத்தப்பட்டவர்களை மீட்கவும் விழுப்புரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மேலும், மேற்படி நபர்களின் கைபேசி இருப்பிடம் குறித்தத் தகவலை, கணினிப் பிரிவு மூலம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் அண்டை மாவட்ட எல்லைகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்ட இருவரில் ராஜேந்திரா என்பவரை கள்ளக்குறிச்சி - சேலம் மெயின்ரோட்டில் இறக்கிவிட்டு சிவன் என்பவரை மட்டும் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிவனை மீட்பதற்காக தனிப்படையினர் கடத்தல் கும்பலின் கைப்பேசி இருப்பிடங்களை, கணினிப் பிரிவு மூலம் அறிந்தனர்.
அதன்பேரில், விழுப்புரம் அடுத்த பூத்தமேடு புறவழிச்சாலை கூட்ரோடு அருகில், கடத்தல் கும்பலின் இரண்டு கார்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாகராஜ், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த செந்தில், சின்னசாமி என்கிற ஓட்டகாது செந்தில், சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன், கார்த்திகேயன், ஓட்டக்காது செந்தில் மனைவியான சத்யா ஆகியோரை மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட சிவனை பத்திரமாக தனிப்படையினர் மீட்டுள்ளனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், துப்பாக்கி மற்றும் ராஜேஷ்கண்ணா அணிந்திருந்த பிரேஸ்லெட் மற்றும் மோதிரம், கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணையில், கடத்தப்பட்ட சிவன், கடத்தலில் ஈடுபட்ட நாகராஜ் என்பவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் வாங்கியதாகவும், இதுவரை பணத்தையோ, இரிடியத்தையோ கொடுக்கவில்லை எனவும், பணத்தை பெறுவதற்காக நாகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்.
கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டக்காது செந்தில் மீது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.