குற்றம்
குற்றம் PT
குற்றம்

இதுஎன்ன சினிமா காட்சியா! பேருந்தில் போலீசார் கூட்டி சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு-வீடியோ

Jayashree A

பட்ட பகலில் நடைபெறும் சில கொலை சம்பவங்கள் மிகவும் பயங்கரமாக சினிமாவே விஞ்சும் வகையில் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலத்தகறாரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான குல்தீப் ஜகீனா மற்றும் அவரது கூட்டாளியான விஜய்பால் ஆகியோரை போலிசார், நீதிமன்ற விசாரணைக்காக, ராஜஸ்தான் ரோட்வேஸ் பேருந்தில் கூட்டிச்சென்றனர்.

இவர்கள் பயணித்த பேருந்தானது பரத்பூரில் உள்ள அமோலி டோல் பிளாசாவின் அருகில் வந்த பொழுது நிறுத்தப்பட்டது. அச்சமயம் 8 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அந்த பேருந்தை நோக்கி வந்தது. அவர்கள் பேருந்தை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கிய உடனேயே பேருந்தில் இருந்த பயணிகள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

அந்த வீடியோவின்படி, பேருந்தின் வாசல் வழியாக இருவர் சுடத்தொடங்குகிறார்கள். மூன்றாவது நபர் ஜன்னல்கள் வழியாக பயணிகளை பார்த்தபடி செல்கிறார். இதில் ஒருவர் பேருந்துக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அமைதியாக வெளியேறுகிறார். மாறி மாறி அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேருந்துக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்தி பின் அமைதியாக வெளியேறுகின்றனர். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த உடனே வெளியே வந்து லோட் செய்துவிட்டு மீண்டு உள்ளே சென்று சுடுகின்றனர். சில நிமிடங்கள் வரை இந்த துப்பாக்கிச்சூடு நீடிக்கிறது. இந்த பகீர் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தாக்குதலுக்கு ஆளான குல்தீப் ஜகீனா மருத்துவமனையில் இறந்து விட்டதாக தெரிகிறது. அவரது கூட்டாளியான விஜய்பால் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பஸ்ஸில் பயணம் செய்த 3 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

தாக்குதல் நடத்திய 8 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பேருந்துக்குள் இருந்த போலிசாரின் கண்களில் தாக்குதல் நடத்தியவர்கள் மிளகாய் பொடியை தூவியதால் போலிசாரால் பதிலடி தாக்குதல் நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்களின் வாகனத்தை துரத்தி சென்று துப்பாக்கியால் சுட்டதாக போலிசார் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தால் பொதுமக்களின் பாதுகாப்பானது கேள்விக்குறியாகி இருப்பதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது.