குற்றம்

அறுவை சிகிச்சை செய்து கைரேகைகள் மாற்றம் - குவைத் விசா பெற நடந்த நூதன மோசடி!

JustinDurai

ரூ.25,000 பெற்றுக்கொண்டு கைரேகையை மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொடுத்து குவைத் விசா பெறுவதற்கு உதவிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

குவைத் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர்களை மீண்டும் அந்நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக சட்ட விரோதமாக கைரேகையை அறுவை சிகிச்சை மூலமாக மாற்றி நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் ஹைதராபாத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த கதிரியக்கம் மற்றும் எக்ஸ்-ரே நிபுணரான நாக முனேஸ்வர ரெட்டி என்பவரும், திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் மயக்க மருந்தியல் பிரிவில் ஊழியராக பணியாற்றிவரும் சகபாலா வெங்கட் ரமணா என்பவரும், ரூ.25,000 பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியாக கை ரேகையை மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளனர். இதன்படி, கைவிரல் முனைப்பகுதியில் மேல் அடுக்கில் அறுவை சிகிச்சை செய்து, திசுவின் ஒரு பகுதியை நீக்கி விடுகின்றனர். பின்னர் மீண்டும் தையல் போட்டு விடுகின்றனர். ஓரிரு மாதங்களில், காயம் குணமடைந்து, கை ரேகையானது மாறிவிடும்.

இந்த வேறுபட்ட கைரேகையை கொண்டு இந்தியாவில் ஆதார் அட்டையில் மறுபதிவு செய்து, புது முகவரியுடன் குவைத்திற்கு மீண்டும் செல்ல புதிய விசாவுக்கு விண்ணப்பித்துச் செல்வது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 11 அறுவை சிகிச்சைகளை இருவரும் செய்துள்ளனர். ஹைதராபாத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த இருவரும் போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது பிடிபட்டனர்.  

மேலும், அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த மருத்துவ சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியானா: முதல்வருக்கு நெருக்கமான பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை - துணிக்கடையில் பயங்கரம்!