திருத்துறைப்பூண்டி அருகே வேலி தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தாக்கப்படும் வீடியோ வெளியான நிலையில், இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த படித்தான்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. மாற்றுத் திறனாளியான இவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் ராதா, லெனின், மண்மலை வாசன் ஆகியோருக்கும் இடையே இடத்தில் வேலி அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஆலிவலம் காவல் நிலையத்தில் ராமமூர்த்தி பலமுறை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ராதாவின் உறவினர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிவதால், ராமமூர்த்தி புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு ராதா மற்றும் அவரது மகன் லெனின், உறவினர் மண்மலை வாசன் மற்றும் பலர் ஒன்று சேர்ந்து ராமமூர்த்தியையும், அவரது மனைவி, பிள்ளைகளை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் மீண்டும் ராமமூர்த்தி புகார் அளித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், போலீசார் அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை தாக்கிய ராதா மற்றும் அவரது உறவினர் மண்மலை வாசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.