பாலமேடு அருகே மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோடாங்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார்கோஸ் (64). தமிழ்நாடு மின்வாரிய ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இம்மாதத்திற்கான ஓய்வூதிய பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை தெரிந்து கொண்ட அவரது மகன் சரவணக்குமார் தனக்கு மது அருந்த பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். தந்தையுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், குமார்கோஸ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், அங்கிருந்த இரும்பு கம்பியால் தனது தந்தையை சராமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் குமார்கோஸை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக குமார்கோஸ் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலமேடு போலீசார், தப்பியோடிய சரவணக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் மகனே தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.