குற்றம்

மகனால் கர்ப்பமான பெண்ணை கொன்ற தந்தை : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மகனால் கர்ப்பமான பெண்ணை கொன்ற தந்தை : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

webteam

சென்னையில் ஒரு கொலை வழக்கில் கைதான நபர் அளித்த வாக்குமூலத்தில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது.

சென்னை பள்ளிகரணை அடுத்த வேங்கைவாசலில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்துவதற்காக கடந்த 5ம் தேதி ஹென்றி ஜெயசில் (33) என்பவர் சென்றார். அதே கடையில் மேடவாக்கத்தை சேர்ந்த சேவியர் அருள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அமுல்ராஜ் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஹென்றி ஜெயசில் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததைக் கண்ட இருவரும், அவரிடம் பேச்சுக்கொடுத்து நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் ஏரி அருகே அமர்ந்து மது அருந்தலாம் எனக்கூறி ஹென்றி ஜெயசிலை அழைத்துச் சென்றுள்ளனர். பெரும்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்துச்சென்று ஹென்றியின் தங்கச் சங்கிலியை பறித்ததுடன், அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றுள்ளனர்.

பின்னர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்கள் போலீசாருக்கு தெரிவிக்க, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் ஹென்றியை யாரோ கழுத்தை நெறித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அமுல்ராஜ் மற்றும் சேவியர் அருளை விசாரணையின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அமுல்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் சேவியர் ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்தார். அதனடிப்படையில் சேவியரிடம் நடத்திய விசாரணையில், தன் மகன் மைக்கல் விஜய்க்கும் தனது மகளின் தோழியான ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு அப்பெண் கர்ப்பமானதாக கூறியுள்ளார். இதனால் அப்பெண்ணை பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததுடன், கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி ஏரியில் வீசி சென்றதாக ஒப்புக்கொண்டார்.

அப்பெண்ணின் உடலை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சடலமாக மீட்டுள்ள போலீசார், அடையாளம் தெரியாத பெண் சடலம் என வழக்குப்பதிந்து விசாரித்து வந்துள்ளனர். தற்போது அந்த சடலம் யாரென்பதும், கொலைக்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேவியரின் மகன் மைக்கல் விஜய்யையும் போலீசார் கைது செய்தனர்.