குற்றம்

கள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது

webteam

சென்னை மாதவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக அதிமுக வட்டச் செயலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சாதிக்பாஷா என்பவர் எழும்பூர் சூரம்மாள் தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மருந்துகளை வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப்பின் சோதித்து பார்த்தபோது அவர் கொடுத்தது கள்ள நோட்டு என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து தேடும் பணியில் ஈடுபட்ட கடைக்காரர்கள், ரயில்வே காலனி பகுதியில் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில் பிடிபட்டவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வனிதா என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக 25-ஆவது வட்டச் செயலாளருமான காமேஷ் குறித்த தகவல்கள் காவலர்களுக்கு கிடைத்தன.

நண்பர்களான இருவரும் மாதவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வனிதா மற்றும் அவரது தோழி சத்தியலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.