குற்றம்

டெமோ ஆடை விற்பனையகத்தில் புகுந்த கொள்ளையர்கள் - ஊழியருக்கு கத்திக்குத்து

webteam

தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் டெமோ விற்பனையகத்தில் புகுந்த மர்ம நபர்கள் கடையை மூடிவிட்டு கடை ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு பணம், நகை, ஆடைகள் கொள்ளையடித்துச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, புதுப்பாக்கத்தில் பி.எஸ்.எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நுழைவு பகுதியில் ஆடை டெமோ விற்பனையகம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்றிரவு மர்ம நபர்கள் 5 பேர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு கடைக்குள் புகுந்து கடையை மூடிவிட்டு கடையில் இருந்த ஊழியர் சந்துரு(31) என்பவரை அடித்து தலையில் கத்தியால் வெட்டி, உடல் முழுவதும் கத்தியை திருப்பி வைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் கடையில் கல்லாவில் இருந்த 5000 ரூபாய் பணம், 2 பெட்டி ஆடைகள், சந்துரு அணிந்திருந்த 3 தங்க மோதிரம், சந்துரு வங்கிக்கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் 10,000 ரூபாய் பணத்தை அனுப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சந்துருவை மீட்டு செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.