செய்தியாளர்: ரா.மணிகண்டன்
சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூரில் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரையும் போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து கார்த்திகேயன் உள்பட நால்வரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி, பார்த்திபன், அழகரசன், சேதுவாசன் மற்றும் சிவக்குமார் ஆகிய ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவர் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜீவகனின் அண்ணன் செல்லதுரையை ஜான் கொலை செய்ததால் தற்போது ஜான் கொலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என எண்ணி தற்போது சரணடைந்திருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோபி சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து சரணடைந்த இருவரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.