செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தாளக்கரை மலை கிராமத்தில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறைகளை வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு பாறைகளை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அவர் அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜ{னன் (41) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பயன்படுத்தி பாறைகளை தகர்த்தும் கம்பரசர் டிராக்டரைக் கொண்டு கற்களை உடைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 110 ஜெலட்டின் குச்சிகள், 194 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனார்.
இதையடுத்து அர்ஜூனனை கைது செய்து பர்கூர் காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மலை கிராமத்தில் உள்ள கோவிலுக்காக பாறைகளை வெட்டி எடுத்ததாக கூறியவர் வெடிப் பொருட்களை கல்பாவி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு அர்ஜூனன் மீது வழக்குப் பதிவு செய்த பர்கூர் போலீசார், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.