குற்றம்

ஈரோடு: பேஸ்புக்கில் மனைவி, மாமியாரை அவதூறாக பதிவிட்டவர் கைது

ஈரோடு: பேஸ்புக்கில் மனைவி, மாமியாரை அவதூறாக பதிவிட்டவர் கைது

kaleelrahman

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டியில் மனைவி மற்றும் மாமியார் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி. பனியன் கம்பெனி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஏழு வயதில் மகன் உள்ளார். முதல் மனைவி இறந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் உடன் பணிபுரியும் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் தமிழ்ச்செல்வியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமாகி ஆறே மாதத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் தமிழ்செல்வி கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அங்குசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் அவரது தாயார் இருவர் குறித்தும் ஆபாசமாக பதிவு செய்து அவமானப்படுத்தியதாக தமிழ்செல்வி புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அங்குசாமியை அழைத்து நடத்திய விசாரணையில் அவர் பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மாமியார் குறித்து அவதூறாக பதிவிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அங்குசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.