செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் உக்கரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், விவசாயிகள் மற்றும் டிரேடரிடம் இருந்து பெறும் விளைபொருட்களுக்கு அதிக விலை தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்மி கடந்த 2012ம் ஆண்டு டிரேடர் பாலசுப்பிரமணியம் என்பவர் பருத்தி, புண்ணாக்கு மற்றும் கிழங்கு மாவு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அதற்கான 4.43 லட்ச ரூபாயை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து சுப்ரமணியம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சில நாட்களிலேயே ஜாமீன் பெற்று வந்த கிருஷ்ணன் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கிருஷ்ணன் இருக்கும் இடம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணன் கூடலூரில் இருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று கூடலூரில் கிருஷ்ணனை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.