குற்றம்

கோயில்களில் அகம்பாவம் முன்னுக்கும் கடவுள் பின்னுக்கும் தள்ளப்படுகிறார்கள்' -நீதிபதி வேதனை

webteam

சினிமா பாணியில் இரு தரப்பினருக்கு இடையேயான மோதலில் 7 ஆண்டுகளாக கோவில்களில் விழா நடக்காமலிருக்கும் சம்பவம் ஈரோடு மாவட்டம் குல்லூரில் நிகழ்ந்துள்ளது.

இருதரப்புக்கு இடையேயான அகம்பாவம், மோதலை குறைக்கும் இடமாக இருக்க வேண்டிய கோவில்களில், அத்தகைய செயல்கள் மேலோங்குவதால் கடவுள் பின்னுக்கு தள்ளப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் குல்லூரிலுள்ள மதுரை வீரன், கருப்பராயன், கன்னிமார் மற்றும் குடும்ப தெய்வங்களின் கோவிலில் வழிபாடு நடத்த பாதுகாப்பு அளிக்க கோரி சேகர் என்பவர் 2015ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

7 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், குல்லூரில் ஒவ்வொரு முறை திருவிழா நடத்த ஏற்பாடு செய்யும் போதும் சேகர் தரப்பிற்கும் சாமிநாதன் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் தரப்பிற்கும் மோதல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் ஜூன் 18ஆம் தேதி நடந்த திருவிழாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை எடுத்து நடத்திய அறநிலையத்துறையை சேர்ந்த நீதிபதி, கடவுள் நம்பிக்கையாளர்கள் அமைதியை தேடி வரும் கோவில்கள், துரதிருஷ்டவசமாக இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடமாகிவிட்டால், கோவில்களின் நோக்கம் சிதைந்துவிடும் என நீதிபதி கவலை தெரிவித்தார்.

மேலும் 10 நாட்களில் கோவிலுக்கு தக்கரை நியமிக்க உத்தரவிட்டார். அவர் மூலம் கோவிலை திறந்து பக்தர்களை அனுமதிக்கவும், அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.