share marker scam in Erode Pt web ( File image)
குற்றம்

சதுரங்க வேட்டை பாணி | ஷேர் மார்க்கெட் மோசடி வலை.. ரூ.2.75 கோடியை இழந்த எலக்ட்ரிக்கல் உரிமையாளர்

ஷேர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அறிமுகமில்லாத நபரின் ஆசை வார்த்தையை நம்பி 2.75 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்.

PT WEB

ஈரோட்டில் ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் தருவதாக கூறி அறிமுகமில்லாத நபரின் ஆசை வார்த்தையை நம்பி போலி செயலியில் 2.75 கோடி ரூபாயை இழந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் நரேஷ்குமார் கடந்த சில ஆண்டுகளாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வருகிறார். கடந்த ஜீன் மாதம் நரேஷ்குமாரை தொடர்புகொண்ட அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் குறிப்பிட்ட செயலியில் டிரேட்டிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய நரேஷ்குமார், கடந்த மூன்று மாதங்களாக பல தவணைகளாக சுமார் 2.75 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

Cyber crime police station erode

அண்மையில், தனது வேலட்டில் (wallet) உள்ள சுமார் 9 கோடியை எடுக்க முயற்சித்து முடியாததால் செயலியை அறிமுகம் செய்துவைத்த நபருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி தொலைப்பேசி அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர், தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் செயலியும் முடக்கப்பட்டதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்து சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், மோசடி செய்யப்பட்ட தொகை அதிகளவு இருப்பதால் சென்னை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.