குற்றம்

தாய், மகள் கொலையில் முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லா... துப்பு துலக்க வீடியோ வெளியீடு!

தாய், மகள் கொலையில் முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லா... துப்பு துலக்க வீடியோ வெளியீடு!

நிவேதா ஜெகராஜா

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயும் மகளையும் அயண் பாக்ஸ்சால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளின் முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லாவை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் டி.எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் ஆண்ட்ரோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மனைவி பவுலின்மேரி, அவரது தாயார் திரேசம்மா என்பவருடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வருகின்றார்.

கடந்த 6-ம் தேதி இரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி விட்டு தூங்க சென்றதாக தெரிகிறது. மறுநாளான 7-ம் தேதி காலை அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காத நிலையில் உறவினர்கள் 7-ம் தேதி மதியம் நேரடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதிலும் கொலை செய்த அந்த மர்ம நபர்கள், முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதோடு வீட்டில் இருந்த அயண் பாக்ஸ்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர் என தெரிந்ததாக சொல்லப்படுகிறது. பின் பவுலின் மேரி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி என மொத்தம் 16 சவரன் தங்க நகைகளை எடுத்துள்ளனர். அதேநேரம் மர்ம நபர்கள் இறந்தவர்களின் கைகளில் கிடந்த மோதிரத்தையோ, காதிலிருந்த காதணிகளையோ, வீட்டில் இருந்த பிற நகைகளையோ திருட முயற்சி செய்யவில்லை. சத்தமின்றி வீட்டிற்கு வெளியே வந்து மீண்டும் கதவை பூட்டி தப்பியோடியுள்ளனர் என காவல்துறை தரப்பு கூறுகிறது.

இந்த சம்பவத்தில் 70 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது. இதை வைத்து பார்க்கையில், மர்ம நபர்களின் இந்த கொலை செயல், நகைக்காக கொள்ளையடிக்க போட்ட திட்டமா அல்லது வேறு ஏதும் முன்விரோதத்தால் தாய் - மகளை கொலை செய்துவிட்டு, பின் அதை நகைக்கான கொலையாக ஜோடிக்க முயற்சிக்கின்றனரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மர்ம நபர்களை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் 5-தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

5-தனிப்படை அமைத்து அவர் உத்தரவிட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக கொலையாளிகள் குறித்த எந்த ஆதாரங்களோ தடயங்களோ சிக்காத நிலையில் இரண்டு தனிப்படை போலீசார் கொலை நடந்த பங்களா வீட்டில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தடயங்கள் ஆதாரைங்களை சேகரித்து வந்த போலீசார் தற்போது அந்த பங்களா வீட்டின் அருகே உள்ள தென்னம் தோப்பில் இருந்து குளிர் பிரதேசத்தில் வசிப்போர் பயன்படுத்தும் மங்கி குல்லா ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

இதனால் கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்றும், அந்த நபர் உள்ளூர் நபராக கூட இருக்கலாம் என்றும் சந்தேகித்து வரும் நிலையில் கொலையான பவுலின் மேரியின் கையில் அகப்பட்டிருந்த கொலையாளியின் தலை முடியையும் டி.என்.ஏ மரபணு சோதனைக்கு அனுப்பி அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் கொலை நடந்த பகுதியில் அவ்வப்போது முகாம் இடும் முட்டம் பகுதியை சேர்ந்த கஞ்சா கும்பலை சேர்ந்த சிலர் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி தங்கராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொலையாளிகள் குறித்த முக்கிய தடயமாக மங்கி குல்லா ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதை யாரேனும் விற்பனை செய்திருந்தாலும் பொதுமக்களுக்கு தெரிந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.