சென்னை பல்லாவரம் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராஜன் (57). இவர் தாம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு ஊழியர்களை அழைத்துச் செல்லும் பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். நேற்று பணி முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பொழிச்சலூர் பிரதான சாலையில் போதை ஆசாமி ஒருவர் வைகுண்டராஜனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், அவரை ஆபாசமாக பேசி, கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களையும் அந்த போதை ஆசாமி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதையடுத்து வைகுண்டராஜனின் புகாரின் பேரில் குடிபோதை ஆசாமி முருகனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.