குற்றம்

வேதாரண்யம்: குடிபோதையில் கொரோனா ஆம்புலன்ஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது

Sinekadhara

வேதாரண்யத்திலிருந்து நாகை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற ஓட்டுநர் குடிபோதையில் நடுரோட்டில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி ரகளை செய்ததால் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளை நாகை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸின் அழைத்து சென்றிருக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் குடிபோதையில் இருந்தால் தேத்தாக்குடி தெற்கு நடுரோட்டில் வாகனத்தை சாலையின் குறுக்கே தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சப்தம் போட்டதையடுத்து ஆம்புலன்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து கொரோனா நோயாளிகள் ஐந்து பேரும் வேறு ஓட்டுநர் மூலம் 108 வாகனத்தில் நாகை அழைத்து செல்லப்பட்டனர். இந்ந சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்வகுமார் வைத்திருந்த பாக்கெட் பாண்டி சாராயத்தை அப்பகுதி மக்கள் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குடிபோதையில் உயிர்காக்கும் வாகனத்தை நடுரோட்டில் தாறுமாறாக ஓட்டிச்சென்ற பன்னாள் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வகுமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.