குற்றம்

ஓமலூர்: பணத்தை கொள்ளையடிக்க விபத்தை ஏற்படுத்திவிட்டு காணாமல் போனதாக நாடகாமாடிய ஓட்டுநர்!

webteam

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் பணம் எடுத்து வரும்போது ஓமலூர் அருகே ஏற்பட்ட விபத்தில், பணம் மாயமானதாக நாடகமாடி ஏமாற்றிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகேயுள்ள சோத்துபாதை பகுதியில் கடந்த மாதம் 4ஆம் தேதி, லாரி ஒன்று தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த லாரியை கேரளாவை சேர்ந்த லாரியின் உரிமையாளர் மௌலானா ஆசாத் மற்றும் ஓட்டுநர் சம்சுதீன் ஆகியோர் ஓட்டி வந்துள்ளனர். விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த லாரி உரிமையாளர் சிகிச்சை முடிந்து சென்றபோது, லாரியிலிருந்த பணம் 21 லட்சம் கொள்ளை போனதாக கூறினர்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விபத்து நடந்த இடத்தில் பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் இருவருமே பணத்தை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரை சேர்ந்த சபரி என்பவர் இரும்பு தாது லோடுகளை ஏற்றிவிட்டு, லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளரிடம் 21 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து கேரளாவில் உள்ள நபரிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை தங்களுக்கு சொந்தமாக்க நினைத்த லாரி உரிமையாளர் மௌலானா ஆசாத் மற்றும் ஓட்டுநர் சம்சுதீன் ஆகிய இருவரும், விபத்தை ஏற்படுத்திவிட்டு 21 லட்ச ரூபாயை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். கேரளாவில் உள்ள மௌலானா ஆசாத்தின் தம்பி சாபர்சாதிக் என்பவரை வரவழைத்த அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் 21 லட்சம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். பணம் திருடியதை மறைப்பதற்காக, ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி சேத்துபாதை பகுதியில் வரும்போது, இவர்களே விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனைக்கு சென்றபோது லாரியில் இருந்த 21 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் தேடிவந்தனர். இந்த நிலையில் லாரியின் உரிமையாளர் மௌலானா ஆசாத் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஓட்டுநர் சம்சுதீன் தப்பியோடிய நிலையில், பணத்தை வைத்திருந்த சாபர்சாதிக் என்பவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த நிலையில், தப்பி ஓடிய ஓட்டுநர் சம்சுதீனை தேடி வருகின்றனர்.