குற்றம்

வருண்குமார் ஐபிஎஸ்க்கு எதிரான வரதட்சணை புகார் வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

Veeramani

தமிழக காவல்துறை அதிகாரியான ஐபிஎஸ் வருண் குமாருக்கு எதிரான வரதட்சணை புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு பிறகு குறிப்பிட்ட தேதியில் பட்டியலிடப்பட்டு  விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்பொழுது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள வருண் குமார் கடந்த 2011ம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வானார். முன்னதாக 2010ம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் இருவர் குடும்பத்தாருடன் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து இந்திய காவல் பணியில் தேர்வானதற்குப் பிறகு அதனை காரணம் காட்டி 2 கிலோ தங்கம் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் வரதட்சணையாக வழங்க வேண்டும் என வருண்குமாரின் பெற்றோர் கேட்டதாக தெரிகிறது.



இந்த வரதட்சணை தராதபட்சத்தில் திருமணம் நடக்காது எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரியதர்ஷினியின் மின்னஞ்சலை சட்டவிரோதமாக ஹேக் செய்து இருவருக்குமிடையிலான உரையாடல்கள், ஆதாரங்களை வருண்குமார் அழித்துள்ளார்.

இந்த நிலையில் வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்துக்  குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது

இதை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல் அதிகாரி வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.



இதில் ஆதாரங்களை முறைகேடாக அளித்தது வருண்குமார் தான் என தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியிருந்தது. இதற்கிடையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு விரிவாக விசாரிக்க படவேண்டிய ஒன்று என்பதால் வேறு ஒரு நாளுக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பிலும் மனுதாரர் பிரியதர்ஷினி தரப்பிலும் விசாரணை தேதி அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, கட்டாயம் இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என மீண்டும் நீதிபதிகள் உறுதி அளித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது வருண்குமார் ஐபிஎஸ் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு வரும் உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். கோடை விடுமுறைக்குப் பிறகு குறிப்பிட்ட தேதியில் வழக்கு பட்டியலிடப்பட்டு நிச்சயம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உறுதி அளித்தனர்