குற்றம்

கொரோனா நோயாளியின் உடலைத் தின்ற நாய்கள் - ஆந்திராவில் அதிர்ச்சி !!

Sinekadhara

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டம் ஜருகுமல்லி பகுதியில் பித்ரகுண்டா கிராமத்தில் வசித்தவர் காந்தா ராவ். ஓங்கோலில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில்(ரிம்ஸ்) வீடற்றோர் மற்றும் ஏழைகள் தங்குமிடமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கியிருந்தார். அங்கு அவரது சடலத்தை நாய்கள் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் நாய்களை விலக்கி பார்த்ததில் அவர் இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதை கண்டறிந்தனர். அவரது முகத்தையும், காதுகளையும் நாய் மென்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

ரிம்ஸ் மருத்துவமனை அலட்சியத்தால் இது நடந்ததாக காந்தா ராவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ராவின் குடும்பத்தினர் கூறுகையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவரை நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கவில்லை. மருத்துவமனை அவரை அனுமதிக்க மறுத்தது ஏன்? எந்த சிகிச்சையும் இல்லாமல் 5 நாட்களாக கொட்டகையில் தங்கவைக்கப் பட்டது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காந்தா ராவ் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. அவர் வெளி நோயாளி என்பதற்கான எந்த பதிவும் இல்லை. கொரோனா சோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி, அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வீடற்றவர்கள் தங்கியிருக்கும் பழைய கேண்டீன் கொட்டகையில் தங்கவைக்கப் பட்டிருக்கிறார் என்று மருத்துவர் ஸ்ரீராமுலு கூறியிருக்கிறார்.

காந்தா ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா அல்லது அவர் சிகிச்சை மறுத்து வெளியே சென்றுவிட்டாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, இறந்த உடலின் வீடியோவை பகிர்ந்ததோடு, ‘மனித நேயத்தின் கடுமையான மீறல்’ என்றும், ஜெகன் மோகன் அரசின் மேனேஜ்மென்ட் தோல்வி என்றும் கூறியுள்ளார்.