raja
raja pt desk
குற்றம்

திண்டிவனம்: திமுக வார்டு கவுன்சிலரின் கணவரும், பிரபல சாராய வியாபாரியுமான மருவூர் ராஜா மீண்டும் கைது!

webteam

கடந்த 12 ஆம் தேதி மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு சம்பவத்திலும் சேர்த்து மொத்தம் 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், பல்வேறு இடங்களில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யாவின் (திமுக) கணவர் மருவூர் ராஜா இன்று கைதாகியுள்ளார். இவரை ஏற்கெனவே கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், அப்போதே 105 லிட்டர் எரி சாராயம், கார் ஆகியவற்றை அவரிடமிருந்து பறிமுதல் செய்திருந்தனர்.

arrest

இதையடுத்து இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திண்டிவனம் கிளை சிறையில் இருக்கும் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மருவூர் ராஜா, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் இருக்கும் புகைப்படங்களை அதிமுகவினரும், பொதுமக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.