சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூன்று இளைஞர்களின் மண்டை உடைக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
மேச்சேரி அருகே உள்ள ஐந்தாவது மைல் என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் போது பாரப்பட்டி மற்றும் ஐந்தாவது மைல் கிராம இளைஞர்கள் மோதிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மேச்சேரி போலீசார், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஐந்தாவது மைல் கிராமப் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞரை பாரப்பட்டி இளைஞர்கள் சிலர் வழிமறித்து தாக்கியதாகத் தெரிகிறது. அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து உடைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அஜித்குமாரின் உறவினர்கள் குமரேசன், ராஜேந்திரன் ஆகியோரையும் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.