Arrested file
குற்றம்

திண்டுக்கல் | தோட்டத்தில் அட்டகாசம் செய்த குரங்கு - சுட்டுக் கொன்று சமைத்து சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல்லில் தோட்டத்தில் தொல்லை கொடுத்த குரங்கை துப்பாக்கியால் சுட்டு சமைத்து சாப்பிட்டதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம் (33). இவருக்குச் சொந்தமாக வீரசின்னம்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இதில், சில தினங்களாக குரங்குகள் புகுந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. இதையடுத்து ராஜாராம், தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜாராம் ரூ.1000 பணம் கொடுத்து தன் தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்ல வேண்டும் என அவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெயமணி, தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து அதை வீட்டிற்கு எடுத்து வந்து கறியை சமைத்து சாப்பிட்டுள்ளார். இதை அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறையினர், ஜெமணியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜாராம் பணம் கொடுத்து குரங்குகளை கொல்லச் சொன்னது தெரியவந்தது. இந்நிலையில், வனத்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.