செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, கே.புதுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 3 பேர் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக, வருவாய் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கே.புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் தனி வருவாய் ஆய்வாளர் மனோகரன், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெளிநாடுகளுக்குச் சென்று வர போலி ஆதார் கார்டுகளுடன், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஸ்டாலின் (35) ஜெயதீபன் (35) பாலதாஸ் (30) ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்த சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ (33) உள்ளிட்ட 4 பேரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.