குற்றம்

சிசிடிவியை கூட கவனிக்காமல் பொறுமையாக திருடிய நபர்கள்! செல்போன் கடையில் கைவரிசை

webteam

திண்டுக்கல் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடையின் பூட்டை உடைத்து 70க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டு போன சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திண்டுக்கல் வடக்குரதவீதி புதுபென்ஷனர் தெருவில் கார்த்திக் என்பவர் மொபைல் போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பழுது பார்ப்பதற்காக வந்த செல்போன்கள் மற்றும் பழுது பார்க்கப்பட்ட செல்போன்கள் என 70-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கடையில் உள்ள சிசிடி கேமராவை சோதனை செய்து பார்த்த போது கடைக்கு மூன்று நபர்கள் வந்துள்ளது பதிவாகியிருந்தது. அந்த காட்சிபதிவில், கடையின் பூட்டை கம்பி ஒன்றை கொண்டு நெம்பி உடைத்து இரண்டு நபர்கள் உள்ளே வருவதும், கடையில் இருந்த 70-க்கும் மேற்பட்ட செல்போன்களை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்து விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.