நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர் திலீப் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பிற்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இன்னும் திலீப் மற்றும் வழக்கு தொடர்பாக நிறைய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், திலீப்பின் காவலை நீட்டிக்கக் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திலீப்பின் சிறைக்காவலை வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் திலீப் சார்பில் அவரது புதிய வழக்கறிஞரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமன்பிள்ளை, திலீப்பின் ஜாமின் மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை.