செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் சந்திரசேகர் (29) மற்றும் அசோக்குமார் (31). இதில், சந்திரசேகர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. அசோக்குமார் மீது 4- வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர், அசோக்குமார் ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று திருப்பூர் பகுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று வக்கீல் வரச்சொன்னதால் சந்திரசேகர், அசோக்குமார் மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆகிய 3 பேரும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள், குண்டடத்தை அடுத்துள்ள இடையன்கிணறு அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த காரில், கொலை செய்யப்பட்ட நாகராஜ் என்பவரின் மகன் சிவக்குமார் மற்றும் 5-பேர் இருந்துள்ளானர். இதையடுத்து அந்த கார் திடீரென்று சந்திரசேகர், அசோக் குமார் மற்றும் சிறுவன் சென்ற மோட்டார் சைக்கிளை இடித்துத் தள்ளியது. இதையடுத்து கீழே விழுந்த அவர்கள் அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்து போலீசாருக்கு போன் செய்துள்ளனர் இதையடுத்து அங்கு சென்ற குண்டடம் போலீசார் மூவரையும் மீட்டனர்.
இதைத் தொடர்ந்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து தலைமறைவான நிலையில், இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று மாலை நாகராஜ், செல்வகுமார், நிதீஷ் குமார், அருண்குமார் ,பாரத் பாண்டியன், ஆகிய ஐந்து பேரும் தாராபுரம் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவன் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு சரணடைந்தனர்.