குற்றம்

செல்போன் பாஸ்வேர்டை பகிர மறுத்த பள்ளி சிறுவன்: கழுத்தை நெரித்து கொன்ற கல்லூரி மாணவன்!

Veeramani

செல்போன் பாஸ்வேர்டை பகிர மறுத்த 12 ஆம் வகுப்பு சிறுவனின் கழுத்தை நெரித்துக்கொன்ற, கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 21 அன்று டெல்லி பிதாம்புரா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் நடந்தது. இது தொடர்பாக ரோஹினி பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிபிஏ மாணவர் மயங்க் சிங் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கொலைசெய்யப்பட்ட சிறுவனின் தந்தை தனது மகனை காணவில்லை என்று போலீஸிடம் புகார் அளித்தார். பின்னர் டெல்லியின் பிதாம்புராவில் ஒரு பூங்காவிற்குள் சிறுவனின் சிதைந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  கொலை நடந்த  இடத்தில் சடலத்தின் அருகே ஒரு பெரிய அளவிலான டெடி பியர் பொம்மை கிடந்ததாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார், மேலும் அந்த இடத்திலிருந்து போதைப்பொருட்களையும் காவல்துறையினர் மீட்டனர். விசாரணையின் போது, சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரும் சிறுவனும் பூங்காவிற்குள் நுழைவதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

குற்றவாளியான மயங்க் சிங் ஏப்ரல் 23 முதல், அவர் தங்கியிருந்த பகுதியில் இருந்து மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உ.பி.யின் பில்குவா பகுதியில் அவரை கைது செய்தனர். " கொலை செய்யப்பட்டவரும், குற்றவாளியும் நண்பர்கள். சம்பவத்தன்று மயங்க் சிங் கொலை செய்யப்பட்ட சிறுவனிடம்  தொலைபேசி கடவுச்சொல்லைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் அவன் மறுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மயங்க் சிங் அந்த சிறுவனை  கல்லால் தாக்கி,  துணியால் கழுத்தை நெரித்து கொன்றார்" என்று பொலிசார் தெரிவித்தனர்.