குற்றம்

பணத்திற்காக வன்கொடுமைக்கு ஆளான மகளுக்கு அநீதி இழைக்க முடிவு செய்த பெற்றோர்..!

பணத்திற்காக வன்கொடுமைக்கு ஆளான மகளுக்கு அநீதி இழைக்க முடிவு செய்த பெற்றோர்..!

webteam

பணத்தை பெற்று கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகளை நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி கூற சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

டெல்லி பிரேம் நகர் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி கடத்தப்பட்டார். இதுதொடர்பாக அமன் விஹார் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமி காணாமல் போன ஒரு வாரத்தில் வீடு திரும்பினார். சிறுமியிடம் விசாரித்ததில் அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இருவர் தன்னை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார் .இதனையடுத்து சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பணம் அடங்கிய ஒரு பையுடன் காவல்நிலையம் வந்த சிறுமி அதிர்ச்சிகரமான செய்தியை கூறியுள்ளார். தனது பெற்றோர்கள் குற்றவாளிகள் தரப்பில் இருந்து பணம்பெற்றுக் கொண்டு தன்னை வாக்குமூலத்தை மாற்றி கூற கட்டாயப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மீது பொய்யான ஆதாரங்களை கூற அச்சுறுத்துவது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, “சிறுமியின் பெற்றோர்களிடம் குற்றவாளிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் வழங்க வாக்குறுதி அளித்துள்ளனர். அதன்படி முதல்கட்டமாக ரூ.5 லட்சத்தை சிறுமியின் பெற்றோர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்ட சிறுமியின் பெற்றோர் அதனைப்பெற்றுக்கொண்டு  நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி கூற கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி, பெற்றோரின் வற்புறுத்தல் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து சிறுமி பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் படுக்கைக்கு கீழே இருந்த பணப்பையுடன் காவல்நிலையம் வந்து விவரத்தை தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் பெற்றோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம். சிறுமியை மீட்டு குழந்தைகள் நல்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.