நேற்று டெல்லியை அதிரவைத்த கொலை சம்பவத்தில் அரை மணி நேரத்திலேயே குற்றவாளியை கண்டுபிடித்த போலிசார்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேஷ் (55) என்பவர் தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள தியோல் பகுதியில் தனது மனைவி கோமல் (47) மற்றும் மகள் கவிதா (23), மகன் அர்ஜூன் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று தம்பதியருக்கு திருமணநாள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அர்ஜூன் அதிகாலை 5:00 மணியளவில் தனது தாய் தந்தைக்கு திருமண வாழ்த்தைக்கூறிவிட்டு காலை நடைபயிற்சிக்கு சென்றதாகவும், நடைப்பயிற்சி முடிந்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்ததாகவும் முதலில் கூறப்பட்டது. இது அர்ஜூன் அளித்த தகவல்.
தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவத்தில் அர்ஜூனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அர்ஜூன் தான் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியை கொன்றது தெரியவந்தது. அர்ஜுனை கைது செய்த போலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய சமயம், அவர் தான் கொன்றதற்கான காரணத்தை போலிசாரிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜூன் அளித்த வாக்குமூலத்தில், “எனது தந்தை என்னை எப்பொழுதும் திட்டி அவமானப்படுத்தி தரக்குறைவாக பேசுவார். அதனால் எனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கும். வீட்டிலேயே தனிமையை உணர்ந்தேன். எனது சகோதரிக்கு சொத்தை பிரித்துக்கொடுக்க தந்தை முயன்றதால், அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இதனால் மூவரையும் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்து காத்திருந்தேன். சம்பவம் நடந்த அன்று காலை கத்தியால் மூவரையும் கொன்று விட்டு பின் நடைபயிற்சி சென்றேன்” என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்.
இதனையடுத்து, போலிசார் அர்ஜூனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.