குற்றம்

மத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ

மத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ

webteam

டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுள் ஒன்று க்ரிஷி பவன். பல்வேறு மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் இந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எப்பொழுதும் அதிகப்படியான பாதுகாப்பு உள்ள இடம். உள்ளே நுழையக் கூட கடும் கட்டுப்பாடுகள் உண்டு. உரிய அடையாள அட்டை , அனுமதிச் சீட்டு அல்லது ஆணை இல்லாமல் இந்த கட்டங்களுக்கு உள்ளேயோ அல்லது அலுவலகங்களுக்கோ செல்ல முடியாது.

ஊடகங்களுக்கு கூட கடும் கட்டுப்பாடு உண்டு. அதிக பாதுகாப்பு கொண்ட இங்கு, அரசுத்துறைகளில் வேலை இருப்பதாக கூறி, முறைப்படி அழைப்பு அனுப்பி, நேர்காணல் நடந்திருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட காவல்துறை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. க்ரிஷி பவனில் வேலை செய்யும் க்ரூப் 4 அந்தஸ்து அதிகாரிகள் உட்பட 7 பேரை கைது செய்துள்ள காவல்துறை , இந்த மோசடி நடந்த விதம் குறித்து விசாரித்த போது அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 

டெல்லியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். சமீப காலமாக இளைஞர்கள் பலர் அரசு வேலை கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏனெனில் வேலை பாதுகாப்பு. இதனை பயன்படுத்தி, அரசுத்துறைகளுக்கு ஆள் எடுப்பதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்தை பார்த்து பலரும் விண்ணப்பித்துள்ளனர். அதில் குறிப்பிட்ட சிலரை, பணம் கொடுக்கும் வசதி உள்ளவர்களா என ஆராய்ந்து அவர்களுக்கு மட்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் இணைய முகவரி போன்ற போலி முகவரி ஒன்று தயார் செய்யப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, கைது செய்யப்பட்டவர்களில் இருந்த அமைச்சகத்தில் வேலை செய்து வரும் அதிகாரிகள் , அமைச்சகத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அதனால், விடுப்பில் இருக்கும் அதிகாரி யார் என கண்டறிந்து அவரது அறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். வருபவர்கள் பெயர் பட்டியலையும் தயார் செய்து, அலுவகத்துக்குள்ளே வருவதற்கான அனுமதியையும் பாதுகாவலர்களிடம் கொடுத்துள்ளனர். அனைத்தையும் தெளிவாக திட்டமிட்டு, இந்த நேர்காணலை நடத்தியிருக்கின்றனர். ஓஎன்சிஜி போன்ற நிறுவனங்களில் வேலை என்றும் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் பேரம் பேசி , பணி ஆணை வழங்க நிபந்தனை போடப்பட்டுள்ளது. 

நேர்காணல் நடத்தி ரூ 22 லட்சம் ஏமாற்றியதாக புகார் ஒன்று டெல்லி காவல்துறையில் பதிவாகி இருந்தது. அதனை விசாரிக்கும் போதுதான் , மத்திய அரசு அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி, வேலை தருவதாக ஏமாற்றிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கும்பலிடம் இருந்து 27 செல்போனும், 10 செக் புக், 45 சிம் கார்டு, 2 லேப் டாப் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் இருந்த தகவல்களை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.