துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர் கூகுள்
குற்றம்

டெல்லியில் தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

இன்று காலை டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayashree A

இன்று காலை டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலங்களில் தொடர்ந்து டெல்லியில் அதிகரித்து வரும் குற்றங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம், தனது குடும்பத்தினரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதவாறு நடைப்பயிற்சி முடித்து வந்த இளைஞரைப்பற்றிய சம்பவம் அடங்குவதற்குள் இன்று காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பிய தொழிலதிபர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை டெல்லியில் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் சுனில் ஜெயின் 57 வயதான இவர் பாத்திரவியாபாரம் செய்யும் ஒரு தொழிலதிபர். இவர் தினமும் காலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அதே போல் இன்று காலை யமுனா விளையாட்டு வளாகத்தில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஃபார்ஷ் பஜார் பகுதி வரும் பொழுது அவர்களைத் தொடர்ந்து பின்னால் வந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் சுனில் ஜெயினிடம், “உங்கள் மொபைல் கீழே விழுந்து விட்டது...” என்று கூறியுள்ளார்கள். நண்பரிடம் சொல்லி வண்டியை நிறுத்திய சமயம், அவர்களைத்தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவரிடம் “நீங்கள் சுனில் ஜெயின் தானே?” என்று பெயரைக்கேட்டு கையில் துப்பாக்கியை எடுத்து இருக்கிறார்கள்.

சுதாரித்துக்கொண்ட சுனில் அவர்களிடம், ”என்னை சுடாதீர்கள் “ என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, சரமாரியாக அவரை மர்ம நபர்கள் சுட்டு வீழ்த்தினர். சுமார் ஏழு அல்லது எட்டுத்தோட்டாக்களை உடலில் வாங்கிக்கொண்டு சுனில் சம்பவ இடத்தில் சரிந்து விழுந்தார். என்று சுனில் ஜெயினுடன் ஸ்கூட்டரில் வந்தவர் போலிசாரிடம் தகவல் தெரிவித்ததாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில், போலீசார் குற்றவாளியைத் தேடி வருவதுடன் கொலைக்கான காரணம் என்ன என்பதையும் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.