குற்றம்

”நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளார்; அவரை தேடி வருகிறோம்”..நீதிமன்றத்தில் போலீசார் தகவல்

webteam

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக சென்னை காவல்துறை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து தவறான கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் மீராமிதுன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜாராகினார், மீரா மீதுன் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதும் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர்.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் பேசுகையில், பிடிவாரண்ட் மீரா மீதுன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.