குற்றம்

சிறையில் இருந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

சிறையில் இருந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

நிவேதா ஜெகராஜா

நாமக்கல் சிறையில் இருந்த மாற்றுத்திறனாளியொருவர் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது அது ‘காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சந்தேக மரணம்’ என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவியை திருட்டு வழக்கில் கடந்த 10ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதில் பிரபாகரன் நாமக்கல் கிளை சிறையிலும், அவரது மனைவி சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கடந்த 13ஆம் தேதி பிரபாகரனின் உடல்நிலை மோசமானதாக கூறி அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதாலேயே பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பிரபாகரனின் மரணம் ‘காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சந்தேக மரணம்’ என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.