crime
crime google
குற்றம்

இறந்துவிட்டார் என நினைத்தவர் உயிரோடு வந்ததால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி

Jayashree A

ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கெடமல்ல பூசையா. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்ததுடன், தானிய வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் பூசையா நிலத்தில், உடல் முழுவதும் கருகிய நிலையில் சடலம் ஒன்றை ஊர்மக்கள் கண்டுள்ளனர். கருகிய சடலத்திற்கு அருகில் பூசையாவின் காலணிகள் கிடந்ததால், இறந்தவர் பூசையாகத்தான் இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

இது குறித்து ரங்கம்பேட்டை காவல் நிலையத்திலும் உடனடியாக ஊர்மக்கள் புகார் அளித்துள்ளனர். கிராம மக்கள் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எரிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றியதுடன், பூசையாவின் குடும்பத்தினருக்கு தகவலையும் தெரிவித்து பிறகு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பூசையா இறந்ததாக நினைத்து அவரது குடும்பத்தார் கவலைபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசிய பூசையா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், பேசியது இறந்ததாக நினைத்த பூசையாதான். தான் இறக்கவில்லை என்றும் உயிருடன் இருப்பதாகவும் தன்னை வந்து அழைத்துச்செல்லும்படியும் குடும்பத்தினரிடம் பூசையா கேட்டுள்ளார். இதனால்அவர்கள், உடனடியாக விரைந்து பூசையாவை மீட்டு அவரிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளனர்.

பூசையாவும், நடந்தது என்ன என்று ஊர்மக்களிடமும் போலீசாரிடமும் கூறியுள்ளார். அவர் கூறும்போது, வியாழன் இரவு தனது வயலில் ஏதோ சத்தம் கேட்கவும், உடனடியாக தனது வயலுக்கு சென்ற பூசையா, அங்கு அடையாளம் தெரியாத ஒரு நபரின் மீது மூன்று மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும், அதை பூசையா தடுக்க முயன்றதாகவும், அப்பொழுது மர்மநபர்கள் பூசையாவை தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றி தெரியாத இடத்தில் மயக்க நிலையில் போட்டு விட்டு சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

பின்னர் மயக்கம் தெளிந்து உறவினருக்கு போன் செய்ததாகவும் கூறினார். பூசையாவின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் கருகிய நிலையில் இருந்த உடல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்