குற்றம்

காதல் திருமணம் செய்த மகள்கள்: ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

kaleelrahman

இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால்; குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிங்காரவேல் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஹேமலதா (26) பவித்ரா (24) ஐஸ்வர்யா (23) பிரகதீ (22) ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், முதல் இரண்டு மகளுக்கு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், மற்ற இரண்டு மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சில வருடங்களாக மனைவி முத்துலட்சுமி மீது, கோபத்தில் இருந்து வந்த கணவர் சிங்காரவேலு தினமும் இரவில் மதுபோதையில் வந்து மனைவியை திட்டிய வண்ணமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்றிரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

எனது மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் எனக் கூறி முத்துலட்சுமியின் தலையில் கட்டையால் அடித்தே சிங்காரவேலு கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார், அங்கு மறைந்திருந்த சிங்காரவேலை கைது செய்து, முத்துலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகை அருகே மகள்களின் காதல் திருமணத்திற்கு காரணமான மனைவியை கட்டையால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.