குற்றம்

’எங்க முன்னாலயே குதிரையில போவியா நீ?’ தலித் இளைஞரை வெட்டிக் கொன்றது கும்பல்!

’எங்க முன்னாலயே குதிரையில போவியா நீ?’ தலித் இளைஞரை வெட்டிக் கொன்றது கும்பல்!

webteam

தனது வயலுக்கு குதிரையில் சென்று வந்த தலித் இளைஞரை சாதி வெறிப்பிடித்த ஒரு கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள டிம்பி (Timbi) கிராமத்தைச் சேர்ந்தவர் கலு ரத்தோட். இவரது மகன் பிரதீப் ரத்தோட். வயது 21. இவர்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. வயலைப் பார்த்துவருவதற்கு நடந்து சென்று வந்த பிரதீப்புக்கு, குதிரை ஆசை வந்தது. அக்கம் பக்கத்து ஊர்களில் சிலர், குதிரைகளில் ஸ்டைலாகச் செல்வதைப் பார்த்து இவருக்கும் அந்த ஆசை. 

இதையடுத்து சொந்தமாகக் குதிரை ஒன்றை கடந்த மாதம் வாங்கினார். குதிரையுடன் நண்பனைப் போல் பழகிவந்த பிரதீப், எங்கேயும் எப்போதும் அதன் மீது செல்வதையே வழக்கமாக வைத்துகொண்டார். வயலுக்கு குதிரையில் சென்றுவரும் போது, அக்கம் பக்கத்து வயல்காரர்கள் பார்த்துள்ளனர். அவர்களால் இதை தாங்க முடியவில்லை.

’இனி, இந்த மாதிரி குதிரையில் வருவதை பார்த்தால், அவ்வளவுதான். ஒழுங்காக குதிரையை விற்றுவிட்டு, நடந்து போ’ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். ஏனென்றால் பிரதீப், தலித் வகுப்பை சேர்ந்தவர். 

அவர்கள் சொல்வதைக் கேட்காமல் வழக்கம் போல குதிரையில் சென்று வந்தார் பிரதீப். இந்நிலையில் கடந்த வியாழக் கிழ மை வீட்டைவிட்டு குதிரையில் சென்ற பிரதீப், பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. 

இந்நிலையில் அவர்களின் வயலுக்கு அருகில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார் பிரதீப். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தப் படுகொலையை கண்டித்து பிரதீப்பின் உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து வேறு ஜாதியை சேர்ந்த மூன்று பே ரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறோம். காதல் பிரச்னை காரணமாகவும் அவர் கொ ல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.