குற்றம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35.7 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது

Sinekadhara

ரூ.35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தைக் கடத்திய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து வரும் விமானம் ஒன்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உளவுத்துறையினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது இண்டிகோ விமானத்தில் ஓர் இருக்கையின்கீழ் உயிர்க்கவச ஆடை வைத்திருக்கும் பையின் உள்ளே சோப்புப் பெட்டி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், சந்தேகப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். அதில் கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 821 கிராம் தங்கப்பசை அடங்கிய 3 பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதிலிருந்து ரூ.35.7 லட்சம் மதிப்பிலான 730 கிராம் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை நடந்துகொண்டிருந்தபோது அவசரமாக வெளியேறிய ஓர் பயணியை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் மதுரையைச் சேர்ந்த யாசர் அபராத்(22) என்றும், அவர்தான் தங்கம் வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததும் தெரியவந்தது.

விசாரணையில் அவர் பயத்தின் காரணமாக தங்கத்தை ஒளித்துவைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திவருவதாக விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.