குற்றம்

கடலூர் திமுக எம்.பி ரமேஷூக்கு அக். 13 வரை நீதிமன்ற காவல்: பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் மேம்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி டிஆர்வி ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ஏற்கெனவே 5 கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் கைது செய்யப்படுவாரா அல்லது சிபிசிஐடி அவரை கைது செய்யுமா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது. அப்படியான நிலையில் இன்று காலை டிஆர்வி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தான் சரணடைந்தது தொடர்பாக இன்று காலை அவர் விளக்கமொன்றும் அளித்திருந்தார். அதில் அவர், “முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கும் நல்லாட்சி மீது இப்படி வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி இவ்வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, எம்.பி.ரமேஷூக்கு அடுத்த 2 நாள்களுக்கு (வரும் 13ம் தேதிவரை) நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன. சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் முன், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சொல்லப்படுகிறது. 13-ம் தேதிக்குப் பின், கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என வழக்கறிஞர் தரப்பில் சொல்லப்படுகிறது. இடையே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ரமேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.