குற்றம்

ஆரோவில் வனப்பகுதியில் இறந்துகிடந்த குக்குறுவான்கள்... விஷம் வைத்து கொலையா என சந்தேகம்!

Sinekadhara

ஆரோவில் வனப்பகுதியில் ஏராளமான செம்மார்பு குக்குறுவான்கள் இறந்துகிடந்ததால் விஷம் வைத்து கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது.

சீரான இடைவெளியில், மாறாத லயத்துடன் சளைக்காமல் கூவும் காப்பர்ஸ்மித் பார்பெட் என்ற செம்மார்பு குக்குறுவான் பறவைகள் சிட்டுக்குருவியை விட சற்று பெரிய அளவிலானவை. பச்சை நிறமுள்ள இப்பறவையின் அலகு தடிமனானது. தலையிலும் மார்பிலும் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும் செம்மார்பு குக்குறுவான் பறவைகளுக்கு அத்தி, ஆல், அரச மரங்கள் என்றால் வெகு விருப்பம். பழங்கள் விருப்ப உணவாக இருந்தாலும் கரையான்கள், சிறு பூச்சிகளை உண்ணக்கூடியவை.

தென்னிந்தியாவில், வெண்கண்ண குக்குறுவான், பழுப்புத் தலை குக்குறுவான், செந்நெற்றி குக்குறுவான், இது தவிர அவ்வப்போது காணக் கிடைக்கும் செம்மார்பு குக்குறுவான் என நான்குவகை குக்குறுவான்கள் இருக்கின்றன.

அரியவகையிலான செம்மார்பு குக்குறுவான் பறவைகள் புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான ஆரோவில் வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. அப்பகுதியில் ஏராளமான குக்குறுவான் பறவைகள் நேற்று கொத்து கொத்தாக இறந்தும் துடித்தும் கொண்டிருந்தன. இவற்றை கண்ட பறவையின ஆர்வலர்கள், வனத்துறையிடம் புகார் கொடுத்துவிட்டு திரும்பியபோது ஒரு பறவைகூட அங்கு இல்லை.

இதனால், குக்குறுவான்களை விஷம் வைத்துக் கொன்று, அதை இறைச்சிக்காக எடுத்துச்சென்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரேவகையான பறவைகள் மட்டும் இறந்து கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிதான இந்த பறவை இனத்தை பாதுகாக்கவேண்டும் என்றும், குக்குறுவான்களை வேட்டையாடுவதை தடுக்கவேண்டும் என்றும் பறவையின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.