குற்றம்

மீண்டும் ஒரு காவல் மரணமா? - செல்போன் திருட்டு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் திடீர் மரணம்!

webteam

செல்போனை திருடியதாக சிக்கிய ரவுடி தினேஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று சிபிஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் கிளோடியோ(21). நேற்று மாலை ஸ்டீபன் 119 என்ற எண் கொண்ட மாநகர பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது துரைப்பாக்கம் அருகே பேருந்து சென்றபோது இரு நபர்கள் ஸ்டீபனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஸ்டீபன் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை மட்டும் பிடித்து கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே உள்ள போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பூர் நீளம் கார்டன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார்(26) சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பி கேட்டகிரி ரவுடிகள் பட்டியலில் இருப்பதும், இவர்மீது கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உட்பட பல காவல்நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் ஸ்டீபனிடம் பறித்த செல்போனை தனது கூட்டாளியான ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தினேஷ்குமாரின் மனைவியான கௌசல்யாவை தொடர்புகொண்டு, அவரது கணவர் செல்போன் திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ளதாகவும், பறித்த செல்போனை அவரது நண்பரிடம் இருந்து வாங்கி கொடுக்குமாறும் கூறியுள்ளனர்.

உடனே தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யா மற்றும் அவரது தாய் இருவரும் மூலக்கொத்தளம் பகுதிக்குச் சென்று ஸ்டீபனிடம் பறித்த செல்போனை தினேஷ்குமாரின் நண்பரிடம் இருந்து வாங்கி கண்ணகி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். செல்போன் கிடைத்து விட்டதால் ஸ்டீபன் புகார் ஏதும் வேண்டாம் எனக்கூறி எழுதிக் கொடுத்து சென்றதால், தினேஷ் குமாரை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அவரது மனைவி மற்றும் தாயிடம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று இரவு வீட்டின் பாத்ரூமில் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் திடீரென்று கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்தவரை அவரது மனைவி கௌசல்யா மற்றும் தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார் ஆகியோர் ஆட்டோ மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தினேஷ் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் போலீசார் தாக்கியதில் பெரும் காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே தனது தம்பி இறந்துவிட்டதாகவும் இறந்துபோன தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினேஷ் மனைவி கெளசல்யா புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "எனது கணவர் தினேஷ் காவலர் தாக்கியதால்தான் இறந்துள்ளார். என்னையும் எனது மகளையும் காப்பாற்ற யாரும் இல்லை. எனது குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தராஜன் பேசும் போது, பாதிக்கப்பட்ட தினேஷ் குடும்பத்திற்கு அரசு சார்பாக 25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

ரவுடி தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் உதவி காவல் ஆய்வாளர்கள் கலைச்செல்வி, ராஜமணி தலைமை காவலர்கள் பார்த்த சாரதி, சந்திர சேகர் ஆகியோரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மரண வழக்கை சென்னை காவல்துறை பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

- ஆனந்தன்