செய்தியாளர்: பிரவீண்
கோவை குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காலவாய் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன். இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, மற்றொரு வாகனத்தின் மீது இவரது வாகனம் உரசி உள்ளது. இதனால் மற்றொரு வாகனத்தில் வந்த அசார் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு அசாருதீனை அழைத்த, மற்றொரு தரப்பினர் இந்த பிரச்னை தொடர்பாக பேசியுள்ளனர்.
அப்போது அசாருதீன் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்குச் சென்ற போது, அசார் தனது நண்பர்கள் 10 பேருடன் வந்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதல் ஏற்பட்டது. இதில், முகமது அசாருதீன் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திய அசார் தரப்பினர் தப்பியோனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அசாருதீன் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார், அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.