குற்றம்

ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட்: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எச்சரிக்கை

Sinekadhara

பாலியல் தொல்லை வழக்கில் நவம்பர் 1ஆம் தேதி ஆஜராகாவிட்டால் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும், பெண் எஸ்.பியை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தன் மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

விழுப்புரம் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றைய விசாரணைக்கு சஸ்பெண்ட் எஸ்.பி ஆஜரான நிலையில் சஸ்பெண்ட் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. இதனால் நவம்பர் 1ஆம் தேதி ஆஜராகாவிட்டால் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.