பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் கைது pt desk
குற்றம்

நீதிமன்ற உத்தரவு: போக்சோ வழக்கில் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் கைது

நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவிடம் காவல்துறை விசாரணை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர், மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் கைது

அதில், தனது மகளின் செல்போனில் பாஜக பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்ததாகவும், இதையடுத்து தனது மகளை கேட்டபோது தனது மனைவி பாஜக பிரமுகரிடம் அடிக்கடி பள்ளிக்கு அழைத்துச் செல்ல விடாமல் தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனியாக இருந்ததாகவும், பாஜக பிரமுகர் ஷா முதலில் தனது மனைவியிடம் தங்களது கடனை அடைத்து விடுவதாகக் கூறி மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

இதையடுத்து மனைவி மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் துன்பறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

Police station

இந்நிலையில், இவ்வழக்கில் முகாந்திரம் இருந்ததால் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் எம்.எஸ். .ஷாவிடம் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நிறைவுற்ற நிலையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். .ஷா கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.