கடலூரில் கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி ஆகியோர் காதலித்து 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இதில் பி.இ பட்டதாரியான முருகேசன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். உறவினர் வீட்டில் தங்கியிருந்த கண்ணகி காணாமல் போகவே, அவரைத் தேடிய உறவினர்களுக்கு முருகேசன் காதல் குறித்த விவரங்கள் தெரியவந்திருக்கிறது.
ஜூலை 8ஆம் தேதி முருகேசனின் சித்தப்பா உதவியுடன் அவரையும், உறவினர் வீட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்துவந்த உறவினர்கள் இருவரையும் அருகிலிருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று அங்கு காது மற்றும் மூக்கு வழியாக விஷத்தை செலுத்தி கொலை செய்து, உடல்களை தனித்தனியாக எரித்திருக்கின்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டதாக முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் போலீசாரிடம் தெரிவித்தபோது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்திருக்கின்றனர். பின்னர் இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சாதி மாறிய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ததாக இருதரப்பிலிருந்தும் தலா 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆணவக்கொலை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்ததை அடுத்து, இந்த வழக்கு 2004ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, அப்போதைய விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உட்பட 13 பேர் குற்றவாளிகளாக உறுதிசெய்யப் பட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதற்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.