சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை அவர்களின் குடும்பத்தினரே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மங்கேஷ் ரன்சை (23) மற்றும் ருக்மணி(19) என்ற இருவரும் கடந்த அக்டோபர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பம் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மங்கேஷ் ரன்சையுடன் சண்டையிட்டு ருக்மணி தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பின்னர் மே 1ஆம் தேதி ருக்மணி மங்கேஷை தொலைபேசியில் அழைத்து தம்மை திரும்ப அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மங்கேஷ் தனது மனைவியை அழைத்து வர அவரது கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ருக்மணியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் அவரைத் திரும்பி அனுப்பிய முடியாது எனத் தெரிவித்தனர். அதன்பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் ருக்மணி மற்றும் மங்கேஷ் ஆகிய இருவர் மீதும் மண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இவர்களில் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது.
இவர்களில் 70 சதவிகித தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ருக்மணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். எனினும் மங்கேஷ் ரன்சை 50 சதவிகித தீ காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார். சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை அவரின் குடும்பமே தீ வைத்து எரித்த சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது.