போதை பெண்
போதை பெண் செய்தியாளர் ரா. சிவபிரசாத்
குற்றம்

குடிபோதையால் கோவை - திருப்பூர் பகுதிகளில் தொடரும் போக்குவரத்து சிக்கல்கள்... மக்கள் கடும் அவதி!

PT WEB

கடந்த சில தினங்களாகவே, கோவை - திருப்பூர் பகுதிகளில் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைப்பதுடன், அவர்களுக்கு பல சிக்கல்களையும் கொடுத்துவருகிறது. போக்குவரத்து சிக்கலையும் ஏற்படுத்துவதால் காவல்துறையினருக்கும் இவையாவும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன.

சம்பவம் 1:

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞரொருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். அதனைக் கண்ட போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது ஆத்திரமடைந்த அவர், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில் போலீசார் அந்த இளைஞரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தார்.

போதை இளைஞர்

இதைத்தொடர்ந்து அவரை அதிவிரைவு படை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவர் பொள்ளாச்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ராஜ்குமார் என்ற அந்த இளைஞர், மாற்றுத்திறனாளி என்பதால் அறிவுறை கூறி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.

சம்பவம் 2

காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையானது எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு சென்றவர்களை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியும் பொதுவெளியில் சுற்றுயிருக்கிறார். இதுகுறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போதை பெண்

அதன்பேரில் அங்கு சென்ற அவர்கள், உடனடியாக அப்பெண்ணை அவ்விடத்தை விட்டு அனுப்ப முயற்சித்தனர். ஆனால் போலீசாரிடம் திமிறி சென்ற அந்தப் பெண், அங்கு வந்த காரை மறித்து நிறுத்தி சாவியை பிடிங்கி சென்றார். காரின் ஓட்டுநர் சாவியை திருப்பி கேட்டதற்கு, தராமல் சுற்றிக்கொண்டிருந்தார். பின் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி அங்கும் கலாட்டாவில் ஈடுபட்டார். இவையாவும் அங்கிருந்தோரை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கியது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீஸ் குழு, அந்தப் பெண்ணை சமாதானம் செய்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசாரின் விசாரணையில் அப்பெண் திருப்பூரைச் சேர்ந்த மகேஷ் என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் தெரியவந்தது. பின் போலீசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சம்பவம் 3

கடந்த திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த பெண்ணொருவர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது போல அவ்வழியாக சென்ற பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதும் வாகனங்களின் கண்ணாடிகளை தட்டுவதுமாக ரகளையில் ஈடுபட்டார். வாகன ஓட்டிகள் அந்தப் பெண்ணை கண்டித்தபோதிலும், தொடர்ந்து அவர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதையறிந்த அப்பகுதி போலீசார், அப்பெண்ணை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். அப்போது அவர் சாலையில் படுத்துக்கொண்டு, போலீஸையும் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்துகொண்டிருந்த அப்பெண்ணின் ரகளையால், அந்த பகுதியில் நொடிக்கு நொடி போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்க, செய்வதறியாமல் திகைத்த போலீசார் ஒருகட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர் .

ஆனால் மீண்டும் அந்தப் பெண் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வரை அன்று அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்ற மகளிர் போலீசார், அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த மகேஸ்வரி என்பதும், சுமார் 35 வயதாகும் அவர், கணவர் இறந்துவிட்டதால் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்கு அரசும் காவல்துறையுமே முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.