ஆவடி அருகே அயப்பாக்கத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதாக சென்னைக்கு குட்கா கடத்தி வந்த இருவர் கைது 200 கிலோ குட்கா பறிமுதல்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடையில் போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு இன்று மதியம் ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அயப்பாக்கம், ஐயப்பா நகர், விநாயகர் கோயில் தெருவில் உள்ள மளிகை கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக ஒரு சரக்கு வேன் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வேனை சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வேனில் இருந்த மூட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மளிகை கடை உரிமையாளர் வீட்டையும் சோதனை செய்தனர். அங்கும் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கண்ட இடங்களில் இருந்த 200கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் அயப்பாக்கம், பவானி நகர், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த வியாபாரி தேன்ராஜ் என்பவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அதில், தடைசெய்யப்பட்ட போதை பொருளான குட்காவை பெங்களூரிலிருந்து சரக்கு வேனில் கடத்தி வந்து கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், குட்கா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வேலாயுதபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் மாரியப்பன் என்பதும் தெரியவந்தது. மேலும், புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் தேன்ராஜ், மற்றும் டிரைவர் மாரியப்பன் ஆகியோரை இன்று மாலை கைது செய்தனர்.