குற்றம்

கோவையில் செல்போன் பறிப்பு கும்பலால் உயிரிழந்த கல்லூரி மாணவன்

webteam

கோவையில் செ‌ல்போன் பறிப்பு கும்பலால் தாக்கப்பட்‌ட பொறியியல் கல்லூரி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது 20 வயது மகன் தமிழ்செல்வன். தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். நேற்று வழக்கம்போல கல்லூரி சென்று விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வனை அவரது வீட்டின் அருகே வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். உடனே அவர் கூச்சலிட, அந்தக் கொள்ளை கும்பல் தமிழ்செல்வனின் இடது ‌பக்க நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர். காயங்களுடன் வீட்டுக்குச் சென்றடைந்த தமிழ்செல்வனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தமிழ்செல்வனை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்செல்வன் குத்தப்பட்ட இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே, மகாலிங்கம் என்ற இளைஞரையும் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கொள்ளையர்களை விரட்டவே, இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக சூலூர் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.