சென்னையில் காதலித்து ஏமாற்றப்பட்டதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மரணத்திற்கு காரணமான இளைஞரை கைது செய்ய வேண்டுமென பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியயை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). இவர் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். இவரது 17 வயது மகள் வித்யா, தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது தாத்தா வீட்டிற்கு சென்று வருவதாகக்கூறிவிட்டு நேற்றைய தினம் வீட்டிலிருந்து சென்ற மாணவி வித்யா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அவரின் பெற்றோர் அங்கு சென்று பார்க்கையில், தனியொரு அறையில் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் கதவை உடைத்து சென்று பெற்றோர் பார்த்த போது, மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்துள்ளார். மகளை தூக்குக்கயிற்றில் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டிபி சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்துபோன மாணவியின் செல்போனை பெற்றோர் ஆய்வு செய்த போது, அதில் அவர்களின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஸ்ரீராம் (வயது 18)என்ற கல்லூரி மாணவருடன் வித்யா நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் இருந்ததை பார்த்துள்ளனர். மேலும் வித்யாவும், ஸ்ரீராமும் காதலித்து வந்ததும், அதன் பிறகு ஸ்ரீராம் மாணவியயை பிரிந்து வேறு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்ததும், வேறு பெண்ணுடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்னதாக, “எனது சாவுக்கு ஸ்ரீராம் தான் காரணம்” என குறுந்தகவல் அனுப்பிவிட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் ‘ஸ்ரீராமை உடனடியாக கைது செய்யவேண்டும்’ என்றும், ‘இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்’ என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அளித்த வாக்குறுதியின் பேரில் மாணவி உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். தொடர்ந்து தற்போது தற்கொலைக்கு தூண்டிய ஸ்ரீராமை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் கீழ்பாக்கம் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், குறிப்பாக தற்கொலைக்கு காரணமான இளைஞரை கைது செய்யவில்லை எனவும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
- சுப்பிரமணியன்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தொடர்புடைய செய்தி: மாணவிகளை செல்போனில் படமெடுத்த இளைஞர்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்